சென்னை, ஜூலை 20–
தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் நேற்று, ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு கருத்தை பதிவிட்டுடார்.
மற்றொரு டுவீட்டில், ‘‘இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை’’ என கவிதை நடையில் எழுதியுள்ள அவர் ‘‘முடிவெடுத்தால் யாம் முதல்வர்’’ என்றும் கூறியுள்ளார். இதனால் கமல்ஹாசன் அரசியலில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும், விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
கமல்ஹாசனின் கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று கூறியிருப்பதாவது:-

A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்
*இந்தி திணிப்புக்கு எதிராக என்றைக்கு குரல் கொடுத்தேனோ அன்றே நான் அரசியல்வாதி தான்.
*ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறு, அரசியலுக்கு வா எனக் சொல்பவர்கள், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்
* ஊழல் குறித்த ஆதாரங்களை இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்க மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
*டிஜிட்டல் யுகம் என்பதால் ஊழல் குறித்த ஆதாரங்களை டிஜிட்டலாக பதிவு செய்யவேண்டும்.
*ஊழல் குறித்த விவரங்களை www.tn.gov.in.ministerslist-இல் அனுப்பலாம்.
*ஊழல் குறித்த இணையதளத்தில் மக்களே குரல் கொடுக்க வேண்டும்.
*எல்லா துறைகளுக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள், என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
*கேள்வி கேட்பவர்களை கைது செய்யும் அளவுக்கு தென்னகத்தில் சிறைகள் இல்லை.
*துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.
*ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் மறந்திருந்தால் நினைவு படுத்த மக்கள் இருக்கிறார்கள்.
*சினிமாவுக்கு வரிவிலக்கு பெற என்னைப்போல் சிலரை தவிர மற்றவர்கள் பயந்து லஞ்சத்துக்கு உடைந்தை.
இவ்வாறு கூறினார்.
இன்று வெளியிட்ட அறிக்கையில் பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜாவை, கமல்ஹாசன் எலும்பு வல்லுநர் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். சமீப காலமாக கமல்ஹாசனுக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அவரது இந்த அறிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.