வினாடிகளில் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

விரைவிலேயே சார்ஜ் ஏறும் பேட்டரிகளை உருவாக்கும் வகையிலான எலக்ட்ரோடுகளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த புதிய எலக்ட்ரோடு செல்போன்களை சார்ஜ் செய்யும் நேரத்தில் உள்ள சிக்கலை தீர்க்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், எலக்ட்ரானிக் வாகனங்களின் பேட்டரிகளின் சார்ஜ் பிரச்சனைகளையும் தீர்க்கும் என்பதால் எலக்ட்ரானிக் வாகன சந்தை ஏற்றம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எளிதில் எடுத்துச் செல்லும் எலக்ட்ரானிக் சாதனங்களில் சூப்பர் கெபாசிட்டர்களை  ஆற்றல் சேமிப்பான்களாக பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே சில முக்கியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள குறைகளை போக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

சூப்பர் கெபாரிட்டர்கள் விரைவில் ஆற்றலை ஏற்கவோ/இழக்கவோ கூடியதாக இருப்பது சிக்கலாக கருதப்பட்டு வந்தது. அதனை போக்கும் வகையிலான எலக்ட்ரோடாக MXene உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் பேட்டரிகள், லேப்டாப்கள்  மற்றும் வாகனங்களின் பேட்டரிகளில் பயன்படுத்தப்பட்டால் சார்ஜ் செய்வதற்கான நேரம் பெரும்பான்மையாக குறையும்.

மணி கணக்கிலோ, நிமிடக்கணக்கிலோ அல்லாமல் சில வினாடிகளிலேயே பேட்டரிகளை சார்ஜ் செய்யும் இந்த தொழில்நுட்பத்திலான பேட்டரிகளை கொண்ட செல்போன்கள் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு பெரும் புரட்சியாகவே அமையும்.