கோலாலம்பூர், ஏப். 26-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு மலேசிய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் மனித உரிமை ஆணையம் (சுஹாக்காம்) தோல்வி கண்டுள்ளது. இதன் வாயிலாக வாக்களிப்பு மையங்களுக்கு நுழைவதற்கு தனது உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அந்த ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. காரணம், பொதுத்தேர்தலைக் கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்பாளர்கள் வரவிருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஹாக்காம் நேர்மை சார்ந்த நிறுவனமாகும். மலேசியாவில் மனித உரிமையைப் பாதுகாக்கவும் அதனை பிரபலப்படுத்தவும் சட்ட ஆணையத்தின் அடிப்படையில் வலிமையைக் கொண்டிருக்கின்றது. பொது நலத்தைக் கருத்தில் கொண்டு சுஹாக்காம் பொதுத்தேர்தலைக் கண்காணிப்பதற்கான திட்டத்தை தொடரும்.

சுயேட்சையான மற்றும் நீதியான பொதுத்தேர்தல் அல்லது அதற்கு மாறானது என்பது மனித உரிமைகளின் அடிப்படை காரணியாகும். எங்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதோடு நேர்மையான பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய மனித உரிமை கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தேர்தலை ஆணையத்தைக் கேட்டுக்கொள்வதாக சுஹாக்காம் கூறியது.

கடந்த 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் 14ஆவது பொதுத்தேர்தலின் வெளிப்படைத்தன்மையைக் கண்காணிக்க குறைந்த 7 நாடுகள் அதாவது, இந்தோனிசியா, தாய்லாந்து, மால்டிவ்ஸ், தீமோர் லெஸ்தே, கெம்போஜா, கிர்கிஸ்தான், அஜர்பைஜான் ஆகிய நாடுகளிலிருந்து பொதுத்தேர்தல் கண்காணிப்பாளர் வரவழைக்கவிருப்பதாக அறிவித்தது.

மேலும், தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தல் கண்காணிப்பில் குறைந்த அனுபவத்தைக் கொண்டிருக்கும் மலேசிய காமன்வெல்த் கல்வி மையத்தையும் (எம்.சி.எஸ்.சி) அழைத்துள்ளது. வேட்புமனுதாக்கலுக்கு இன்னும் 2 நாடுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இந்த அனைத்துலக பொதுத்தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான விதிமுறைகள், எந்த தரப்பு கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.