கோலாலம்பூர், ஏப்.26-
பத்து தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயாராக இருக்கின்றேன். இம்முறை எனக்கு சேவையாற்றுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என பத்து தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவிருக்கும் கெராக்கான் கட்சியை சேர்ந்த டாக்டர் டோமினிக் லாவ் கேட்டுக்கொண்டார்.

தமக்கு வழங்கும் 5 ஆண்டுக்கால அவகாசத்தில் இங்குள்ள குடியிருப்பாளர்களின் தேவைகளை தாம் பூர்த்தி செய்யத் தவறினால் பதவியிலிருந்து தம்மை தூக்கி எறியுமாறு செய்தியாளர்களிடம் அவர் கூறினார். 2008, 2013 என இரண்டு பொதுத் தேர்தல்களில் பத்து தொகுதியில் பிகேஆர் கைப்பற்றியது. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் எந்த மேம்பாடும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதை இங்குள்ளவர்களும் நன்கு அறிவார்கள் என அவர் தெரிவித்தார்.

தாம் பத்து தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் பத்துவை சுற்றுலா கலாசார தளமாக உருமாற்ற எண்ணம் கொண்டிருப்பதாகவும் குறிப்பாக தலைநகரில் மையப்பகுதியில் இருக்கும் பத்து நாடாளுமன்றத்தை சுற்றுப்பயணிகளை கவரும் வகையில் மாற்றி அமைக்க தாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

குறிப்பாக செந்தூலில் சாலை அருகாமையில் இருக்கும் செய்ண்ட்ஜோசப் தமிழ்ப்பள்ளி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுவதற்கும் தாம் நடவடிக்கையை முன்னெடுப்பேன் என்று அவர் கூறினார். பத்து தொகுதியில் 16 விழுக்காடு இந்திய வாக்காளர்கள். அதனால் இந்தியர்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆய்வறிக்கையை தாம் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

செந்தூல் மின்சுடலையை நவீன மயமாக்கும் திட்டத்தையும் தாம் கொண்டிருப்பதாகவும் பத்துவில் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் நிலப்பிரச்னைக்கும் உடனடி தீர்வு காணப்படும் என டாக்டர் டோமினிக் லாவ் கூறினார். பொதுமக்களுக்கான சில மேம்பாட்டுத் திட்டங்கள் தொடரப்படாமல் இருக்கின்றது. அதை தாம் முதல் கட்டமாக செயல்படுத்துவதாக உறுதி அளித்தார் 2013ஆம் ஆண்டு பத்து தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகுதியில் தாம் சேவையாற்றி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் பிரச்னைகளை தாம் முன்னெடுக்கும் போது நீங்கள் பத்து தொகுதியில் பிரதிநிதியா? என கேள்வி வருகின்றது. அனைத்தையும் எந்த தயக்குமுமின்றி முன்னெடுக்க பத்து தொகுதியில் தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

சீனர்களின் ஆதரவு எதிர்கட்சிக்குத்தான் என்பதை டோமினிக் லாவ் மறுத்தார். பத்து தொகுதியில் சீனர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதி வாக்காளர்கள் அனைவரையும் தாம் சந்தித்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியர்களை பொறுத்தவரை 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்களின் ஆதரவை நிச்சயம் பெறுவேன் என டோமினிக் லாவ் உறுதியளித்தார்.

ஒரு முறை மட்டும் பத்து தொகுதி நாடாளுமன்றத்தை என்னிடம் ஒப்படையுங்கள். 5 ஆண்டுகளில் அனைவரும் வியக்கும் நாடாளுமன்றமாக பத்து தொகுதியை மாற்றி அமைக்கிறேன். இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்றேன். நான் கொடுத்த வாக்குறுதியை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றா விட்டால் 15ஆவது பொதுத் தேர்தலில் என்னை முற்றாக நிராகரிங்கள் என டாக்டர் டோமினிக் லாவ் கோரிக்கை விடுத்தார்.