மதியழகன் முனியாண்டி

பிபிபி கட்சியிலிருந்து டான்ஸ்ரீ கேவியஸ் நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் தேசிய தலைவரை, சுப்ரிம் கவுன்சில் ஒன்றுகூடி நீக்கியிருப்பது மலேசிய அரசியல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. கட்சியில் நெருக்கடி ஏற்ப்பட்டு; கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்களின் எதிர்ப்பினால் நமது நாட்டின் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.

மே 13 கலவரத்துக்கு பின் துங்கு அப்தூல் ரஹ்மான் ஏறத்தாள வீட்டு காவல் போன்ற சூழ்நிலையில் இருந்தார். நாட்டின் நிர்வாகத்தை ஏற்று நடத்துவதற்கு தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்கப்பட்டது. தேசிய நடவடிக்கை மன்றத்துக்கு துன் ரசாக் தலைவராக இருந்தார். இந்த சூழ்நிலையில் அம்னோவின் தேசிய தலைவர் பதவியை துங்கு ராஜினாமா செய்தார்.

கடந்த காலங்களில் கெராக்கான், மசீச, மஇகா போன்ற கட்சிகளில் மிக பெரிய உட்பூசல்கள் நடந்துள்ளது. பதவி போரட்டம் வெடித்து நடுதெருவில் வந்து சண்டை போட்ட கதை எல்லாம் நடந்துள்ளது. ஆனால் நமது நாட்டின் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அதன் தலைவரை கட்சியை விட்டு நீக்கியதில்லை.

மஇகாவில் பழனி அணிக்கும் சுப்ராவுக்கும் பெரும் பதவி போரட்டம் வெடித்த போது; பழனிவேலுவை கட்சியை விட்டு நீக்கவில்லை. கட்சியின் விதியை மீறிய காரணத்தால் அவர் தன் தலைவர் பதவியை தானாக இழந்தார். பழனி கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, அவர் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர் அந்தஸ்த்தை இழந்திருந்தார். பழனியோடு சேர்ந்து நீதிமன்றம் சென்ற பலரும் கட்சியின் உறுப்பினர் பதவியை இழந்தார்கள். பழனிக்கும் சுப்ராவுக்கும் நடந்தது பதவி அபகறிக்கும் போராட்டம்.

ஆனால் இங்கு கேவியஸ்-க்கு நடந்திருப்பது வேறு மாதிரியான சம்பவம். பிபிபி கட்சிக்கும்; பிபிபி கட்சி அங்கம் வகிக்கும் பாரிசான் கூட்டணிக்கும் எதிராக செயல்ப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கேவியஸ் கட்சியிலிருந்தும், கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அதிகாரபூர்வ தலைவராக இருக்கும் போதே; கட்சியின் செயலவை குழு ஒன்றிணைந்து ஒரு தலைவரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது இதுவே முதல் முறை.

பலருக்கும் இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மஇகா கட்சிக்கு சொந்தமான கேமரன் மலை தொகுதியை கேவியஸ் கேட்க ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனை ஆரம்பமானது. கேமரன் மலையில் போட்டி போடுவதிலிருந்து தாம் விட்டுக் கொடுக்க போவதில்லை என்று தொடர்ந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்.

கேமரன் மலை தொகுதியில் போட்டியிட தமக்கு வாய்ப்பு தரவில்லை என்றால், சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவித்த பிறகு, பாரிசானுக்கும் நஜிப்க்கும் மேலும் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். மஇகா கட்சியிடமிருந்து கேமரன் மலை தொகுதியை தமக்கு வாங்கி தராவிட்டால், பிபிபி கட்சி பாரிசான் கூட்டணியை விட்டு வெளியேற போவதாக நேரடியாகவே அழுத்தம் கொடுத்தார்.

இது பாரிசான் கூட்டணியின் தலைவர் நஜிப்க்கும், துணை தலைவர் சாயிட் அமிடிக்கும் கோபத்தை உண்டு பண்ணியது. கேவியஸ்-சின் பேரத்திற்கு முடிவு கட்டும் விதமாக, சிகாம்புட் தொகுதியை ஒதுக்கி கொடுத்தது பாரிசான். கேவியஸ் அதை மறுத்தார்.

இதற்கிடையில் பத்திரிக்கை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த கேவியஸ்; கேமரன் மலை தொகுதி மஇகா வேட்பாளார் சிவராஜ் பிபிபியின் உறுப்பினர் என்று கொளுத்தி போட்டார். இது நெட்டிசன்களுக்கு அவல் பொறியாக கிடைத்தது.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை தெங்கு அட்னான் விலாயாவுக்கான பாரிசான் கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இதில் பிபிபி கட்சியை சேர்ந்த துணையமைச்சர் லோகபாலாவை சிகாம்புட் தொகுதி பாரிசான் வேட்பாளராக அறிவித்தார். லோகபாலாவை சிகாம்புட் பாரிசான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் வழி, கேவியஸ்-சின் கேமரன் மலை பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக எல்லோரும் நம்பினார்கள்.

தன் அனுமதி இல்லாமல் லோகபாலாவை வேட்பாளராக அறிவித்துவிட்டதாக அறிக்கை விடுத்தார். கூட்டணி கட்சியின் புரிந்துணர்வை மீறிவிட்டதாக கேவியஸ் பாரிசானை குற்றம் சாட்டினார். பாரிசானுக்கு எதிராக அறிக்கைகள் கொடுத்த போது, கட்சி தனக்கு விசுவாசமாக இருக்கும் என கேவியஸ் எதிர்ப்பார்த்தார். தன்னை மீறி தன் கட்சி மேலிடம் செயல்படாது என்று நம்பினார். காரணம் பிபிபியின் முழு அதிகாரமும் கேவியஸ் கையில்தான் இருந்தது. கேவியஸ்தான் பிபிபி. பிபிபிதான் கேவியஸ். தன்னை மீறி எதுவும் நடக்காது என உறுதியாக இருந்தார்.

இங்குதான் ட்விஸ்ட். கட்சி கேவியஸ் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தது. கட்சியின் சுப்ரிம் கவுன்சில் மீட்டிங் போட்டு; கேவியஸ்-சை கட்சியிலிருந்து நீக்கினார்கள்.  பிபிபி சுப்ரிம் கவுன்சில் ஒரு பத்திரிக்கை செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கேவியஸ் முக்கிய அறிவிப்பை செய்வார் என பலரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிபிபி கட்சி பாரிசான் கூட்டணியிலிருந்து வெளியேறும் அறிவிப்பு அல்லது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகும் முடிவாகவே இருக்கும் என அனைவரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் போது; இன்னொரு ட்விஸ்ட் வந்தது. கட்சியின் பிரஸ் மீட்க்கு முன்பே கேவியஸ் தன் ஃபேஸ்புக்கில்; தாம் கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அதுவும் இந்த விலகல் கடந்த 23 ஏப்ரல் திகதியிலிருந்து அமலுக்கு வருவதாக குறிப்பிட்டார்.

ட்விஸ்டுக்குள் ட்விஸ்ட் வந்தது. கேவியஸ்-சின் இந்த ஃபேஸ்புக் அறிவிப்புக்கு பின் நடந்த கட்சியின் செய்தியாளர்கள் கூட்டத்தில், கேவியஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கட்சியின் செயலாளர் அறிவிப்பு செய்தார்.

இந்த அறிவிப்பு செய்த போது, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். பாரிசான் கூட்டணிக்கு எதிராக செயல்படுவதாகவும் கட்சியின் விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.  நின்று நிதானமாக யோசித்தால்; கேவியஸ் கட்சியில் இருந்து நீக்கப்படபோவது அவருக்கு முன் கூட்டியே தெரிந்துள்ளது. ஆகவே தன் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள தாமே முன் வந்து பதவி விலகலை முன் திகதியிட்டு அறிவிப்பு செய்தார்.

தலைவர் இல்லாமலேயே கட்சியின் சுப்ரிம் கவுன்சில் கூட்டம் கூடி தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது நடப்பது சாமன்ய காரியம் கிடையாது. தலைவர்தான் ஒரு கட்சிக்கு எல்லாமே. அந்த தலைவரையே நீக்குவது என்பது எப்பேர்ப்பட்ட காரியம். அதை செய்து முடித்த கட்சி மேலிடம் அவரைவிட கெட்டிகாரர்கள் என்றும் கூறலாம். அல்லது இதற்கு பின்னால் நின்று நாடகத்தை ஆட்டி வைப்பவர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதாகவும் கூறலாம்.

இதுவரை நடந்தது எல்லாமே மிக சரி. ஆனால் இங்குதான் டிவிஸ்ட்டுக்கும் டிவிஸ்ட் இருக்கிறது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், கட்சியின் விதிமுறையை மீறி செயல்ப்பட்டதால் கேவியஸ் மீது கட்சி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இங்கு கேவியஸ் கூட்டணிக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார்.

கேவியஸ் தன் கட்சிக்கு கூடுதல் சீட் கேட்டார். தன் கட்சியின் வேட்பாளரை கட்சியின் தலைவர் என்கிற முறையில் தன்னோடு கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவை விமர்சித்தார். இது கட்சிக்கு மீறிய செயல் கிடையாது.

அவர் தன் கட்சிகாக சில முடிவுகளை எடுத்தார். தன் கட்சிக்கு ஆதரவாகவே செயல்ப்பட்டார். தான் அங்கம் வகித்த பாரிசான் கூட்டணிக்கு எதிராக சில முடிவுகளை எடுத்தாரே தவிர தான் தலைவராக இருக்கும் பிபிபி கட்சிக்கு எதிராக செயல்படவில்லை.

பாரிசான் கூட்டணிக்கு எதிராக செயல்பட்டதால்; பாரிசான் கூட்டணி பிபிபி கட்சியின் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பாரிசான் கூட்டணியின் புரிந்துணர்வுக்கு எதிராக செயல்ப்பட்டதால்; பாரிசான், பிபிபி கட்சியை தன் கூட்டணியிலிருந்து விலக்கி இருக்க வேண்டும்.

பாரிசான், பிபிபி கட்சி மீது எடுத்திருக்க வேண்டிய முடிவை; பிபிபி கட்சி தன் கட்சியின் தலைவர் மீது எடுத்துள்ளது. பிபிபி கட்சியை பாரிசான் கூட்டணியில் இருந்து நீக்கினால், இன்னும் 12 நாட்களில் நடக்கபோகும் நாட்டின் 14-வது தேர்தலில் பாரிசான் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என கணக்கு போட்டு; பிபிபி கட்சியை கேயியஸ்-க்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. கேவியஸ் அடுத்து என்ன செய்ய போகிறார்?

பொதுத் தேர்தலுக்கு பிறகு கேவியஸ் செய்தியாளர்களை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார். அதற்காக அனைத்து ஊடகங்களும் காத்திருக்கின்றன. கேவியஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது முடிவல்ல!! தொடக்கம்

இந்த கட்டுரை அநேகன் வாசகர் மதியழகனின் தனிப்பட்ட கருத்தாகும். இது அநேகனின் நிலைப்பாடல்ல  – ஆசிரியர்