காஜாங், ஏப். 28-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் செமினி சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வேட்பாளர் டத்தோ ஜொஹான் அப்துல் அசிஸ், பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த அருட்செல்வம், பி.கே.ஆரின் பக்தியார் முஹம்மட் நோர், பாஸ் கட்சியின் மாட் ஷாமியோர் மாட் கோசிம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நேரடி போட்டியும் 2013ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டியையும் எதிர்நோக்கிய டத்தோ ஜொஹான் அவற்றில் வெற்றி பெற்றதோடு இப்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

டூசுன் துவா சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் சார்பில் முஹம்மட் ஜின் இசா. பி.கே.ஆரின் எட்ரி பைசால் எட்ரி யூசோப், பாஸ் கட்சியின் ரசாலி ஹாசான் ஆகியோர் போட்டியிடவுள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. உலுலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் அஸ்மான் அஹ்மாட், பி.கே.ஆரின் ஹாசானுடின் முஹம்மட் யுனோஸ், பாஸ் கட்சியின் டாக்டர் சே ரோஸ்லி சே மாட் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

காஜாங் நகராண்மைக் கழகத்தின் டேவான் ஸ்ரீ செம்பாக்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்த வேட்புமனு தாக்கலில் தேர்தல் நிர்வாகி முஹம்மட் சாயுத்தி பாக்கார் வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.