புத்ராஜெயா, மே 14-
7ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீர் பதவியேற்ற நேரத்திலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வைத்து வருகிறார்.
தற்போது, அந்த அதிரடிகளின் தொடர்ச்சியாக கருவூல தலைமை செயலாளர் டான்ஸ்ரீ முஹம்மட் இர்வான் செரிகார் அப்துல்லாவை அப்பதவியிலிருந்து பொதுச்சேவைத் துறைக்கு மாற்றியுள்ளார். இந்த பணி மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா தெரிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
1எம்.டி.பி. தலைவரான இர்வான் செரிகார் அப்துல்லா இனி கருவூல தலைமை செயலாளராக பணியாற்ற முடியாது. மேலும், அவரது குத்தகை காலம் குறைக்கப்பட்டு ஜூன் 14ஆம் தேதியுடன் அவரது குத்தகை காலம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு, அதிரடியாக ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆலோசகராக இருக்க தயாராக இருப்பதாக தாமே முன்வந்து கூறிய சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலியை உடனடி விடுப்பில் செல்லும்படி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உத்தரவிட்டுள்ளார். மேலு, அவரும் நாட்டை விட்டு வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து துன் மகாதீர் கூறுகையில், சட்டத்துறை தலைவரின் நிலை கொஞ்சம் கடினமாக உள்ளது. அவருக்கு இப்பொழுதுதான் புதிய குத்தகை காலம் வழங்கப்பட்டுள்ளது. நாம் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். இப்பொழுது சட்டத்துறை தலைவரை நீக்கும் விவகாரத்தில் நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. அதனால், அவருக்கு விடுமுறை அளித்துள்ளோம். அவர் விடுமுறையில் இருக்கும் போது அவரது கடமைகளை அரச தரப்பு வழக்கறிஞர் எங்கூ நோர் பைசா எங்கூ ஏற்றுக்கொள்வார் என இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களை சந்தித்த போது துன் மகாதீர் கூறினார்.
அபாண்டி அலி மீது விசாரணை மேற்கொள்ளப்படுமா? என வினவப்பட்ட போது, தற்போது வரையில் 1எம்.டி.பி விவகாரத்தை மூடுவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்பட அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் இதுவரையில் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஏதும் அவர் மீது இல்லை. இதன் அடிப்படையில், அவருக்கு விடுமுறை வழங்கப்படுகின்றது. அவர் மீது அதிகாரப்பூர்வமான அறிக்கை வழங்கப்பட்டால் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள முடியும். இது நடக்கும் பட்சத்தில் அவர் வெளிநாட்டிற்கு செல்வது தடை செய்யப்படும் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மாட் விலகியிருப்பது குறித்து வினவப்பட்ட போது அது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் மீது விசாரணையை மேற்கொண்ட பிறகு அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என துன் மகாதீர் கூறினார்.
மேலும், அந்த ஆணையத்திற்கான புதிய தலைவரை நாளை நியமிக்கக்கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.