கோலாலம்பூர், மே 18-

பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீருக்கு மங்கோலிய அதிபர் கால்மாகின் பதுல்கா வாழ்த்து தெரிவித்தார். மாடல் அழகி ஷாரிபு அல்தான்துயாவின் கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் கால்மாகின் நம்பிக்கை தெரிவித்தார்.

மங்கோலிய அதிபர் எனும் வகையில் கடந்த 2006 அக்டோபர் 18ஆம் தேதி மலேசியாவில் மங்கோலிய பிரஜையான அல்தான்துயா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நான் சிறப்பு கவனம் செலுத்துகிறேன்” என அவர் கூறினார். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான அல்தான்துயா கொலை செய்யப்பட்டது இரு நாடுகளுக்கிடையிலான இரு வழி உறவு குறிப்பாக இவற்றின் மக்களுக்கிடையே அசௌகரியமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது” என்று அதிபர் குறிப்பிட்டார்.

இச்சூழலைக் கருத்தில் கொண்டு துன் மகாதீர் நீதியை நிலைநாட்டும் வகையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதிமன்றத்தின் வாயிலாக நல்ல தீர்ப்பைத் தேடித் தருவார் என்று நான் நம்புகிறேன். இது நம் இரு நாடுகளுக்கிடையிலான இரு வழி உறவை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்” என்று துன் மகாதீருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

துன் மகாதீர் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்தில் மலேசியா அடைந்த மேம்பாடு குறித்து அவர் சுட்டிக் காட்டினார். அக்கால கட்டத்தில் மலேசியா வட்டார மற்றும் அனைத்துலக நிலையில் புகழ் பெற்றிருந்தததையும் அவர் மேற்கோள் காட்டினார்.

1997ஆம் ஆண்டில் துன் மகாதீர் மங்கோலியாவிற்கு வருகை புரிந்ததை நினைவுகூர விரும்புகிறேன். இந்த வருகையானது இரு வழி உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தியது” என்றார் கால்மாகின். மங்கோலியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை நிலைநாட்டுவதற்கு துன் மகாதீர் ஒத்துழைப்பை நல்குவார் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.