Homeமலேசியாபொங்கல் விழாவுக்குச் சமயம் சாயம் பூசி தமிழினத்தைப் பிளவு படுத்தாதீர் ! – தமிழ் முசுலிம்...

பொங்கல் விழாவுக்குச் சமயம் சாயம் பூசி தமிழினத்தைப் பிளவு படுத்தாதீர் ! – தமிழ் முசுலிம் சமூகத்தினர் வருத்தம்

ஈப்போ | பிப்பரவரி 19

பொங்கல் விழாவுக்குச் சமயம் சாயம் பூசி தமிழினத்தைப் பிளவு படுத்த வேண்டாம் என தமிழ் முசுலிம் சமூகத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பல்லினம் வாழக் கூடிய, பல சமய மத நெறிகளை மக்கள் பின்பற்றி வாழக் கூடிய மலேசியத் திருநாட்டில் தாய்த்தமிழ் இனத்தின் விழாவான இயற்கைக்கு நன்றி கூறக்கூடிய விழாவாகவும் சமய – மதம் சாராத தமிழர்களுடைய உன்னதமான விழாவாகிய பொங்கல் விழாவுக்குக் காலத்திற்கு ஏற்ப மும்மொழிகளில் மலேசிய அரசாங்கத்தினால் கல்வி அமைச்சின் கிழ் அமைக்கப்பட்ட தமிழ் மொழிக் காப்பகம் கையேடு வெளியிட்டது பெரும் பாராட்டுக்குரியது என கவிஞர் பெருங்குளம்  ஹாஜி ஹாஜா கூறினார்

ஆதியில் இருந்தே தமிழர்கள் பல சமய, மத, நெறி, நம்பிக்கைகளைச் சார்ந்து வாழ்கிறார்கள். இருந்தாலும், நம் அனைவரையும் தாய்மொழியின் அடிப்படையில் ஒன்றிணைக்கக் கூடியதாகவும் ஒற்றுமைத் திருநாளாகவும் பொங்கல் விழா அமைகிறது. தமிழினத்தின் தனித்தன்மையாகவும் தனி அடையாளமாகவும் பொங்கல் விழா விளங்குகிறது என்றால் அது மிகையாகாது என தலை நகரைச் சேர்ந்த ஆசிக் அலி தெரிவித்தார்.

பல்வேறு சமயத்தால் வேறுபட்டிருப்பதால் ஒரு சிலரால் பொங்கல் விழா சார்ந்த பண்பாட்டை முழுதாகக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், தமிழ் நாட்டிலும் மலேசியாவிலும் பெரும்பான்மையானத் தமிழ் முசுலிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதனை முறையாகவும் சரியாகவும் கட்டிக் காத்து வருகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது என தலைநகரைச் சேர்ந்த அஷ்ரப் கூறியுள்ளார்.

பொங்கல் விழாவுக்காகவே வீட்டில் கரும்பு கட்டி அலங்கரித்து தயாராவோம். பொங்கல் நாளன்று பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகயை முடித்த பின்னர் பொங்கலிட்டு (பால் சோறு) கொண்டாடி மகிழ்வோம்  என ஷா ஆலாமைச் சேர்ந்த ஹாஜி பஷீர் கூறினார்.

இந்த வழக்கம் இன்றும் தமிழகத்தில் தமிழ் முசுலிம்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது சிறப்பு.

மேலும், மலேசியாவில் தமிழர் திருநாளைத் தமிழவேள் கோ. சாரங்கபாணி ஐயா முன்னெடுக்கும் போது தமிழ் முசுலிம்களின் ஆதரவும் பங்களிப்பும் அளப்பறியது. அவருக்குப் பக்கபலமாக இருந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார்.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, தமிழர்களின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவாகத் திகழும் பொங்கல் விழாவுக்கு ஒரு குறிப்பிட்ட சமயச் சாயம் பூசும் செயல்பாடு மிகுந்த வேதனையை அளிக்கிறது என ஈப்போவைச் சேர்ந்த ஹாஜி பி.எஸ்.எம் சாகுல் ஹமீது கூறினார்.

இன்னும் தெளிவில்லாமல் தமிழினத்தின் ஒற்றுமையைச் சமயத்தைக் கொண்டு பிளவு படுத்தும் கயமைத்தனம் நடப்பில் இருப்பது தமிழ் முசுலிம் சமூகத்தினரின் மனதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கிள்ளானைச் சேர்ந்த கவிஞர் அ.மு.நௌஃபல் கூறினார்.

வருத்தம் தெரிவிக்கும் தமிழ் முசுலிம் சமூகத்தைச் சேர்ந்தோர்

  1. கவிஞர் பெருங்குளம்  ஹாஜி ஹாஜா, கூலிம்
  2. கவிஞர் அ.மு.நௌஃபல், கிள்ளான்
  3. ஆசிக் அலி, தலைநகர்
  4. அஷ்ரப், தலைநகர்
  5. ஹாஜி பஷீர், ஷா ஆலம்
  6. ஹாஜி பி.எஸ்.எம் சாகுல் ஹமீது, ஈப்போ

கவிஞர் பெருங்குளம்  ஹாஜி ஹாஜா

கவிஞர் அ.மு.நௌஃபல்,கிள்ளான்

ஆசிக் அலி,தலைநகர்

அஷ்ரப்,தலைநகர்

ஹாஜி பஷீர்,ஷா ஆலம்

ஜி பி.எஸ்.எம் சாகுல் ஹமீது, ஈப்போ

spot_img

latest articles

explore more