கோலாலம்பூர் | பிப்பரவரி 19

உலக்தாய்மொழிகளுக்கு எல்லாம் தாயாக நிற்கும் தமிழ்மொழியே தொன்மையான
முதல் மொழி என்பது தமிழினத்திற்கே கிடைத்த பெருமையாகும்.

அந்த பெருமையைத் திரும்பிப் பார்க்கும் அதேவேளையில், மொழியின் பற்றுதலை வெளிப்படுத்தும் முயற்சியில் புத்தாக்க தமிழ் அறிவார்ந்தோர் இயக்கம், தாய்த்தமிழ் 2021 எனும் நிகழ்ச்சியை இயங்கலை வழி ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளையில், அநேகன் இணைய ஊடகம், பாரதி கற்பனைத் திறன், தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம், இயல் பதிப்பகம், மலேசிய செந்தமிழர் பேரவை, சுடரொளி வலையொளி மற்றும் AIR தமிழா இணைய வானொலி ஆகிய இயக்கங்களும், இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்து தாய்மொழி நாளைக் கொண்டாடவிருக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்19 பெருந்தொற்றும், அதனால் அமலாக்கம் கண்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவும், தாய்த்தமிழை பெரிய அளவில் கொண்டாடமுடியாத நிலையை உருவாக்கி இருந்தாலும், அதனை ஒரு தடையாக கருதாமல் இயங்கலை வழி இந்த முயற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடங்கி இரவு 9 மணிவரை கொண்டாடப்படவுள்ளது.

திறப்பு விழாவுடன் தொடங்கும் இந்ந நிகழ்ச்சி, தாய்மொழி நாள் உருவான கதையோடு
(NEWS7 TAMIL தமிழ் தொலைக்காட்சி) கருத்தரங்கம், சிறப்பு காணொலிகள், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு, சிறப்பு பட்டிமன்றம் என்று பல்வேறு சிறப்பு அங்கங்களுடன் தொகுக்கப்பட்டு அரங்கேறவிருக்கிறது.

இதன் நேரடி ஒளிபரப்பு அநேகன் இணைய ஊடகத்தின் முகநூல் வாயிலாக காணலாம். அதோடு, இயல் பதிப்பகம், சுடரொளு வலையொளி மற்றும் பாரதி கற்பனைத் தளம் ஆகிய முகநூல் பக்கங்களின் வாயிலாகவும் கருத்தரங்கள் ஒளியேற்றவிருக்கிறது.

தற்போதைய இளைஞர்களிடையே, தமிழ் தழைக்கிறதா? தடுமாறுகிறதா என்ற சிறப்பு பட்டிமன்றத்தில் உயர்கல்வி மாணவர்கள் பங்கேற்று அனல் பறக்கும் வாதங்களை எடுத்து வைக்கும் வேளையில், தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில் கருத்தாழமிக்க கருத்தரங்களும் நடைபெறவுள்ளன.

சிறப்புகள் வாய்ந்த தமிழ்மொழி மலேசிய மண்ணில் ஒரு புறம் வளர்ந்துக்கொண்டு வந்தாலும் இன்னொரு புறம் சரிந்துகொண்டு வருவதாக கூறும்வேளையில், இளையோர் சமுதாயத்தின் மத்தியில் தமிழ் மீதான பற்றுதலை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சியை முகநூல் வழியாக கண்டு களித்து ஆதரவு வழங்க வேண்டுமென ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுகொள்கின்றனர்.

மேல் விபரங்களுக்கு
ஜனார்த்தனன் வேலாயுதம்
(010-9009230)