கோலாலம்பூர் | பிப்பரவரி 20:-

 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை PKP நடப்பில் உள்ள மாநிலங்களிலும் திருமணம் போன்ற சமய நிகழ்ச்சிகளை நடத்த மலேசிய அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என கோத்தா ராஜா தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அனைத்துத் தொழில் துறைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டப் பகுதிகளைத் தவிர்த்து இதர மாநிலங்களில் திருமணத்தை நடத்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

தற்போது கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் PKP நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீடிக்கும் வேளையிலும், அனைத்துத் தொழில் துறைகளும் செயல்பட வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம், சமய நிகழ்ச்சிகளையும் பெருநாட்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக இத்தொழில் துறையைச் சார்ந்த பல இந்தியர்களின் வாழ்வாதாரம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். இந்தியர்களீன் திருமண நிகழ்ச்சிகளைச் சார்ந்துச் செயல்படும் இந்தியர்கள் தற்போதையச் சூழலில் இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். அவர்களின் மீது அரசாங்கத்தின் கருணைப் பார்வை திரும்ப வேண்டும் என கஜேந்திரன் கேட்டுக் கொண்டார். கூடிய விரைவில் அரசாங்கம் இது குறித்து நல்ல செய்தியை வழங்கும் எனவும் அவர் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.