(அம்மு)
 
தமிழ் திரையுலக பீஷ்மர் கவிஞர் வாலி மறைந்து இன்றோடு நான்காவது ஆண்டு. திரையுலகத்தை மட்டுமின்றி, உலகின் கோடான கோடி ரசிகர்ளை ஒரு நிமிடம் மெளனிக்க வைத்த பெருமை இந்த தாடிக்காரரின் மரணத்திற்கு உண்டு. காலத்திற்கும் ஞாலத்திற்கும் ஏற்றவாறு மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகித்து இதயங்களில் இடம் பிடித்தவர் இந்த சொல்வித்தகர்.
எங்கோ ஓர் மூலையில் இருந்து, தமது எழுத்துக்களின் மூலம் பட்டித் தோட்டி முதல் பிரபலாமகி இன்று ஒவ்வொரு வீட்டின்  சிடி, டிவிடி, பெண்டிரைவ் என்று எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார் இந்த மூத்த கவிஞர்.
 வாய்ப்புகள் இல்லை என்று கோடம்பாக்கம் அவரை விரட்டிய பொது, “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா” என்ற கண்ணதாசனின் வரிகளை பி.பிஸ்ரீநிவாஸ் பாடிய அந்த நொடிபொழுது வாலியின் புதிய பருவம் தொடங்கி உள்ளது. இன்றைய நாளில் சின்ன சின்ன தோல்விகளை ஏற்றுக்கொள்ள  முடியாத எத்தனையோ உள்ளங்களுக்கு வாலியின் தொடக்கம் நல்ல உதாரணமாக இருக்கும். அதேபோல், வேறு எந்த பாடலாசிரியருக்கும் இல்லாத சில பெருமைகள் கவிஞர் வாலிக்கு மட்டுமே உள்ளன.  இந்தியாவின் அதிகாமான பாடல்களை எழுதியவர் வாலி.. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி நான்கு தலைமுறைகள் தாண்டி பாடல்கள் எழுதியவர் வாலி…
 கவியரசு கண்ணதாசனுக்கு பக்கத்தில் யாரும் நெருங்க முடியாத அளவில் அவரையே வியக்கவைத்து சிந்திக்க வைத்தவர் வாலி.. இன்னும் இப்படி எத்தனையோ இருக்கு.  தன் பேனா வீச்சால் எத்தனையோ பாடல்களை எழுதிவிட்டார், அவற்றில் சிலவற்றை அலசி பார்த்தால அத்தனையும் தங்கமாகவே இருக்கின்றன..
இவரின் பிரபலமான பழயப்பாடல்களில் சங்கம் கண்ட அழகுத் தமிழ் கொஞ்சி விளையாடிதை கொஞ்சம் ரசித்து பார்ப்போம் … வாலியின் தத்துவமும் ஜனரஞ்சகமும் அதிகாமாக எம்.ஜி.ஆர் பாடல்களில் இருந்ததால் அவரின் ஆஸ்தான கவிஞராகவே வாலி வலம் வந்தார்.
மண்குடிசை வாசல் என்றால்
தென்றல் வர மறுத்திடுமா..?
மாலைநிலா ஏழை என்றால் 
வெளிச்சம் தர மறுத்திடுமா.. ? (கொடுத்ததெல்லாம்)
 
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான்  எங்கள் வீடு..
முடிந்த்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழக்கை  (தரைமேல்)
எளிய வார்த்தைகள், ஆனால் துல்லியாமன
கையாடல்களை இவரது பழைய காதல் பாடல்களில் பார்க்க முடியும்.
நல்ல நிலவு தூங்கும் நேரம் என் நினைவு தூங்க வில்லை..
கொஞ்சம் விலகி நின்ற போது இந்த இதயம் தாங்கவில்லை..
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்..!
 
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்..
கன்னி ஊர்வலம் வருவாள்..
அவள் உன்னைக் கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்.. (குமரிப்பெண்ணின்)
 
எந்த கலைஞனும் அவனை சிலை வடிப்பான்
எந்த புலவனும் அவனை பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும் … (நான் பார்த்திலே)
காலம் இவரை மாற்ற, நவீனத்துவத்தையும் தமது பேனாவில் வரைந்து புதிய யுகத்தை அழகுபடுத்தினார். அடுத்த தலைமுறைகளின் இதயங்களுக்காக வாலி காதலையும் புதுவிதத்தில் சொன்னார், நம்பிக்கையையும்  ஜாலியாய் வாலி சொன்னபடி என்று எழுத்தில் தந்தார்.
உந்தன் காலில் மெட்டிபோல் கூடநடப்பேன்..
உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்..
மாலை சூடி தோளில் ஆடி கைத்தொட்டு மெய்தொட்டு 
உன்னில் என்னைக் கரைப்பேன்… (இந்தியன்) 
 

பேசடி ரதியே ரதியே! தமிழ் வார்த்தைகள் முந்நூறு லட்சம்
நீயடி கவியே கவியே இரண்டு சொல்லடி குறைந்த பட்சம்

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேன்டஸி

 நிமிர்ந்து நில் துணிந்து செல்..
தொடங்குது ஒரு யுகம்..
நினைத்ததை நடத்திடு..
நினைப்பது உன் பலம்..
தடைகளை உடைத்திடு..
தாமதம் அதைவிடு..
கடமைகள் உரியது (நிமிர்ந்து நில்) 
 
இப்படியாக, ஜனனம், மரணம், காதல், தத்துவம், பொது உடமை, ஜனரஞ்சகம், இலக்கணம், இலக்கியம், பெண்ணியம், அழகியல், சிந்தனை, வர்ணனை, கேலி, நையாண்டி, விஞ்சானம், மெய்ஞானம்,பழையது, புதியது நவீனம், என்று எல்லாத் தளத்திலும் காலூன்றி வேறூன்றிய பெருமை கவிஞர் வாலிக்கு மட்டுமே சொந்தம்..
வைணவ குலத்தில் பிறந்த இந்த ரங்கராஜன் நான் கடவுள் படத்தில் சைவ சமயத்தை போற்றி எழுதியதும் வரவேற்ற தக்கது. அதேபோல், தசவதாரம் திரையில், ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடலுக்கு தமது அப்பாவின் பெயரையும் தமது இயற்பெயரையும் கொண்டு வரைந்த வரிகள் காலத்தும் நிற்கும் படி அமைந்திருக்கின்றன.
தாம் எழுதிய பால்களில் தமக்கு  மிகவும் பிடித்த பாடல்களில் இவரை இரண்டும் என்று ஒரு முறைவாலி குறிப்பிடிருந்தார்.
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம் 
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா (அம்மா) 
 
 நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள் வேர ராரும் வந்தாலே தகுமா….?..
 
தேன் மழை தேக்கத்தில் நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல் வேறுயாரும் சாய்ந்தாலே தகுமா. ?(முன்பே வா)
 
வாலி பற்றிய இன்னும் சில சுவாரிஸ்யமான தகவல்கள் :
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
* `பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.
* `எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
* எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
* சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன்.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
 
* ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை அணிந்திருந்தார்.
* 1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்ந்தது.
* எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
வாலி தனிமை விரும்பி அல்ல, எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
* வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார்.
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகா’ என்று தான் உச்சரிக்குமாம்.
* எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான், இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
வாலி வாய்ப்புகள் தேடிய காலம் சென்று வாய்ப்புகள் இவரைத் தேடும் காலமும் பிறந்தன.உடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுக்க இருந்தாலும் சினிமா இவரை விடாது அவரின் வீடுவரைத் தேடிச் சென்றது. வீட்டில் இருந்துக்கொண்டே இயக்குனர்களுக்கு பாடல்களை நொடிப்பொழுதில் தந்தவர் வாலி.
தாய்மைக்கும், நட்புக்கும், அன்புக்கும் பண்புக்கும் பாட்டெழுதியதுடன் வாழ்ந்தும் காட்டியவர் இந்த புதிய கம்பன்.  சில ஆண்டுகளாக  திரையுலகை வலம் வந்த சில நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வெடுக்க இறைவனடி சேர்ந்தன.
மெட்டமைக்க முதலில் ராமமூர்த்தி சென்றார்..
பாட்டிசைக்க பின்னால் டி.எம்.எசும் போனார்..
இவர்களோடு  சிவலோக பிதாவின் பாதங்களை ரட்சிக்க உரிமையோடு சென்ற
வாலிக்கு எப்போதுமே மக்கள் மனதில் நீங்காத ஓர் இடம் உண்டு.